Monday, January 16, 2017

இளையராஜாவிடம் போய் உங்களுக்கு இசை மிகவும் பிடிக்குமா என கேட்கலாமா?




நான் அது போல கேட்டேன் ஒருவரிடம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக என்னை அழைத்தது செல்பேசி, எதிர் முனையில் ஒரு இளைஞனின் குரல்
தன் பெயரை சொல்லி இன்னார் பரிந்துரைத்தார், இது போல ஒரு பழுது இதை சரி செய்ய வரவேண்டும் என. ஒப்புக்கொண்டு நானும் சென்றேன் அவர் இல்லம் தேடி.

அவர் இல்லம் எளிதில் கண்டுபிடிக்க இயாலாத இடத்தில் சற்று உள்ளடங்கிய இடத்தில் இருப்பாதால் வழி காட்ட அவரும் மெயின் ரோட்டிற்க்கு வந்திருந்தார், முதல் சந்திப்பு. அவ்ர் நான் எதிர்பார்த்த இருபதுகளின் இறுதில் இருக்கும் இளைஞர் இல்லை, முப்பதுகளின் நடுவில் இருப்பவர் என நினைத்துக்கொண்டேன்.

அவருடன் சென்று பழுது நீக்கும் பணியில் இருக்கும் போது கண்களில் பட்டது ஒரு சிறிய ரெப்ரிஜிரேடர் போன்ற ஒன்று அதனுள் கேமராக்களும் லென்ஸ்களும், அப்போது தான் நான் கேட்டேன்.

”சார் போட்டோகிராபி ல ரொம்ப இண்ட்ரஸ்டோ என” பதிலுக்கு அவர் சிரித்துக்கொண்டே ஆமோதித்தார்.


என் பழுது நீக்கும் பணியின் இடையே பேசும் பொழுது மெது மெதுவாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். ஆஹா யாரிடம் வந்து என்ன கேள்வி கேட்டோம் என ”சுர்” என உறைத்தது. நான் எதிர்பார்த்தது போல அல்லாமால் ஐம்பதை தொட இருக்கும் ஒரு இளைஞர் இவர் என உணர்ந்து கொண்டேன் .

ஒரு போட்டோ ஆல்பத்தை என்னிடம் காண்பித்தார், ஒரு குழந்தையின் பிறப்பு முதல் முதலாம் பிறந்தநாள் வரை. பார்த்து அசந்து போனேன். நான் மட்டுமா பல பிரபலங்களும் கண்டு வியந்து பாரட்டிய ஆல்பம் அது. பல முறை தேசிய விருது வாங்கிய தோட்டாதரணி வாழ்துறை வழங்கி பாரட்டிய ஆல்பம் அது.

அப்படியே பணியின் இடையே மேலும் சில படங்களை கண்டு வியந்து, புகழ்ந்து பணியை முடித்து பணமும் வாங்கி விடைபெற்றேன். இவ்வளவு இருந்தும் சற்று கராரண டெக்னீஷியனாகவே நடந்து கொண்டேன். இவ்வளவு விரிவாக சொல்லக்காரணம் அவரது எளிமை, கர்வம் கொள்ளாமை, தன்னடக்கம், மனித பண்பு.

அதன் பிறகு ஒரு சில சந்திப்புகள் மேலும் பல புரிதல்கள், வியப்புகள், அன்பின் பினைப்பாகி அவரை மனதளவில் என் சகோதரராகவே ஏற்றுக்கொண்டேன். சுமார் 30-35 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபிலிம்/அனாலாக் தொழில் நுட்ப்பத்தில் இருந்து தொடங்கி டிஜிட்டல் வந்தவுடன் அதையும் தன்வசப்படுத்தி தான் மட்டும் வாழாமல் எல்லோருக்கும் workshopகள் மூலம் வித்தையை பகிர்ந்து மகிழ்ந்து வாழும் மிகச்சிறந்த மாமணிதர்.

அவரை நான் அன்புடன் சொல்வது “ரகு ஸாய்”, அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது
ஸாய் ரகு- ஸாய் ரகுநாத்.

பகிர்ந்து மகிழும் பண்போடு, தன் பணியினை வழையடி வாழையாய் தொடரும் மகள் செளமியாவுடன் நிழல் ஸ்டுடியோ வழியாக செவ்வனே செய்து மகிழ்கிறார் இந்த நிஜ மனிதர்.

https://www.facebook.com/sairaghunath.raghunath

https://www.facebook.com/NizhalPhotography/?fref=ts

https://www.facebook.com/NizhalPhotography/videos/1114667821971507/



Saturday, December 31, 2016

வர்தா புயலும் வாழ்க்கையும் Part Two

Part Two

வர்தா புயலும் வாழ்க்கையும்

திங்கள் அன்று வீசிய புயலின் காரணமாக சென்னை மற்றும் சுற்று புறங்களில் பல்லாயிறக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் முறிந்தும் வேரோடும் சாய்ந்து விழுந்தன. அதனுடைய தொடர்சியாக எல்லா பகுதிகளிலும் மின் வினியோக நிறுத்தம் அதன் விளைவாக மெல்ல மெல்ல எல்லா செல்போன் சேவைகளும் முடக்கம். சென்னை தனது அடுத்த ”டிசாஸ்டர் டிசம்பர்” மாதத்தை சந்தித்தது. செல்போன் சேவை பாதிப்பால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நன்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என்ன ஆனதோ என்ற பதைப்பும் சேர்ந்து கொண்டது. எல்லோரும் நலமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வதை தவிர வேரேதும் வழியில்லை.

13 டிசம்பர் 2016 செவ்வாய் கிழமை, 

காலை வழக்கம் போல எழுந்து காலை வேலைகளை முடித்து விட்டு எங்கள் குடியிறுப்பு பகுதி பதிப்பை சுற்றிப்பார்க்கலாம் என நானும் சில நன்பர்களும் முடிவு செய்தோம். மொத்தம் 12 முக்கிய  மற்றும் குறுக்கு  சாலைகள் குடியிறுப்பு பகுதி. அத்தனை சாலைகளிளும் நிழலுக்கு வைக்கப்பட்டிருந்த அதிக வேர்பிடிப்பில்லாத மரங்கள் எல்லம் வேரோடு சாய்ந்திருந்தன, பாரம்பரியமான புங்கை மரங்கள் கிளைகளை மட்டும் இழந்திருந்தன.  ஒரு சில இடங்களீல் டிரான்ஸ்பார்மர் மேலேயே மரங்கள் விழுந்து சேதப்படுத்தி இருந்தன.  

சில வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்பட்ட தேக்கு மரங்கள் காற்றின் வேகத்தால் விழுந்து அந்த வீடுகளின் காம்பவுண்ட் சுவற்றையும் வீழ்த்தி இருந்தன.  ஆனால் எந்த ஒரு இடத்திலும் தென்னை மற்றும் பணை  மரங்கள் எதுவும் வீழ்திருக்கவில்லை. நல்ல வேளையாக என் வீட்டு பெரிய மரங்கள் சிறிய அளவு பாதிப்புடனே தப்பின. வேரோடு சாய்ந்தது கறிவேப்பிலை மரம், ஒரு சிறிய மஞ்சள் பூ மரம், ஒரு கொய்யா மரம்(இழுத்து நிமிர்த்தி கட்டி வைத்துள்ளேன்). மற்றபடி மா பலா போன்றவற்றின் கிளைகள் மட்டும் முறிந்தன.

பெரும் வாகனங்கள் செல்லும் முடிச்சூர் சாலையில் உள்ள வனிக நிறுவனங்களின் ஃப்ளெக்ஸ் பெயர் பலகைகள், நிழலுக்கு ஏற்ப்படுத்தி இருந்த டின் ஷீட் கூரைகள் ஏன் ஒரு சில பெரிய நிறுவனங்களின் இரண்டாம் தளத்தில் ஸீ த்ரூ கண்ணாடிகளும், பெயர்பொறிப்புகளும்  கூட காணாமல் போயிருந்தன. மண்ணிவாக்கம் கூட்டு ரோட்டில் ஊராட்சி நிர்வாகத்தின் பேருந்து நிறுத்தம் நிழர்கூறையும் சின்னாபின்னம் ஆகி இருந்த்தது. சில தெருக்களில் மழை நீர் ஆறுபோல பெருகி ஒடியும் குளம் போல் தேங்கியும் இருந்தது. இவ்வளவு ரணகளத்திலும் கிளுகிளுப்பாக சிறுவர்கள் கிடைத்த இடங்களில் கிரிக்கட் விளையாடி இடும்பைக்கு கிடும்பை படித்துக் கொண்டிருந்தார்கள். 

நகர்வலம் முடித்து மதிய உணவு உண்டு ஓய்வு. மாலை மாலவன்(பெருமாள்) கார்திகை.  இன்றும் இறைவனுக்கு படையலோடு மாலை பூஜை, இன்றைய ஸ்பெஷல் மாலவன் கண்டருளிய சூடான சுவையான கொழுக்கட்டை.  தாயார் திருவடிகளே சரணம்.  இன்று மாலை அமைதியான காற்று, மேலும் மழை இல்லாத காரனத்தால் மக்களுக்கு தீபத்திருவிழா நினைவுக்கு வந்துவிட்டது. பெரும்பாலானோர் இன்வர்டர் மின்சாரத்தை காலி செய்திருந்தனர். வழக்கம் போல என்னகத்தில் ஒரே ஒரு எல் ஈ டி விளக்கு  தேவைக்கு மட்டும் பயன்பாடு. மற்றபடி ஒரு ஒரு செல்போன் மட்டும் சார்ஜ்.

மின்சாரம் இல்லா இரவு,  வானில் மெலிய ஒளியோடு மதி வருகை, வழி நெடுக அகல் ஒளி பெருக வாழ்க்கையே தேஜோமயமானது போல் இருந்தது. இரவு உணவு முடித்து எல்லோரும் வழக்கமான நேரத்திற்கு முண்பாகவே உறங்க சென்றனர். வானில் முழு மதி, மண்ணெங்கும் அதன் ஒளி, ஜீவன் சுகம் பெற ராக நதியினில் நாம் நீந்தலாம் என மனம் அழைக்கிறது. 

என் வீட்டு தோட்டத்தில், பால் நிலா பாதையில் சிந்தை நிறைந்த ராக தேவனின் இசை ஊற்றெடுக்க தொடங்கியது. எங்கே சென்றாலும் என்னோடு வரும் நிலவே நீ இல்லா அந்நாளில் என்னோடு எவர் வருவார், ஆறாத ஆசைகள் தோண்றும் ஆனாலும் வாய் பேச அஞ்சும், நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை,கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே, ராகங்களால் தீபங்களை ஏற்றி வைத்தான் தான்சேன்............. என மெட்லியாக Blissfull hours.

end of part two

Wednesday, December 28, 2016

வர்தா புயலும் வாழ்க்கையும் Part One

வர்தா புயலும் வாழ்க்கையும்

Part One


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

2016 டிசம்பர் 12 திங்கட்கிழமை, கார்திகை தீபம். வர்தா புயல் என எதிர்பார்த்துகொண்டிருந்த நேரம் காலை மணி 8. வெளிச்சம் இருந்ததே தவிர ஆதவனை காணவில்லை, ஓய்வரியா சூரியன் ஓய்வெடுக்க சென்றானோ என என்ன தோன்றும் படி இருந்தது சூழ்னிலை.  தமிழக மின் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகத்தை நிறுத்தியது.

தமிழ்நாடு வானிலை மனிதர் “ப்ரதீப் ஜான்” பெரிய அளவில் எச்சரிக்கை கொடுத்திருந்தாலும் மனித மனம் அலட்சிய போக்கில் இன்வர்ட்டரையிம் மற்ற மின்கல சாதனங்களையும் வழக்கம் போல பயண்படுத்த பணித்தது. இவ்வேளையில் படிப்படியாக காற்றின் வேகம் சீற்றமாக மாற தொடங்கியது. காலை 11 மணியளவில் காற்றின் வேகத்தில் ஆடிய மரங்களின் கிளைகள் முறிய தொடங்கின, முறிந்த கிளைகளில் ஒன்று BSNL தொலை தொடர்பு ஒயரை துண்டித்தது.

நேரம் போக போக காற்றும் மழையும் சீற்றம் கூடிக்கொண்டே இருந்தது, இயற்கை மனித மன அழுக்குகளை அடித்து துவைக்க ஆரம்பித்திருந்தது . தெண்னை மரங்கள் வளைந்து நெளிந்து பேய் பிடித்தது போல் ஆடின. மா, வேம்பு போன்ற பாரம்பரிய மரங்கள் தங்கள் கிளைகளை காற்றுக்கு காவு கொடுத்தன. சாலையோரங்களில் நிழலுக்கும் அழகுக்கும் வளர்க்கப்பட்ட குல்மொஹர் போன்ற அதிக வேர்பிடிப்பில்லா மரங்கள் நெடுஞ்சான் கிடையாக விழுந்து தங்களையே பலியாக தந்தன காற்றுக்கு.

மதியம் சுமார் 1.30-2.00 மனியளவில் உச்சத்தை எட்டினான் வாயு தேவன். தென்னம் ஓலைகளும் பாளைகளும் ஏன் இளனீகளையும் கூட பறக்க விட்டு விளையாடினான். மாடி வீடுகளில்  வேயப்பட்டிருந்த கூறைகள், டின் ஷீட் ஷெட்கள், சிண்டெக்ஸ் டாங்குகள் இயற்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றன. இயற்கை மனிதனுக்கு இன்னும் ஒருமுறை பாடம் எடுத்துக்கொண்டிருதது. தன் வாழ்நாளில் இதுவரை கானாத காற்றை/சீற்றத்தை மனிதன் பார்த்தான்.

மாலை 4 மெதுவாக தன் வேகத்தை மட்டுப்படுத்த ஆரம்பித்த காற்று சற்று நேரத்திற்கெல்லம் அமைதியானது. சுமார் 5 மனி வரை புயலுக்கு பின் அமைதி தோற்றம். பயந்து பதுங்கி இருந்த உயிர்கள் எல்லாம் வெளியே தலையை நீட்டின. பெரும்பாலான மாடிகள் நீச்சல் குளங்கள் போல காட்சியளித்தன, காற்றில் அடித்து வந்த குப்பைகள் நீர்வடிகால்களை அடைத்து மழை நீரை மாடிகளில் குளம் போல் தேங்கச்செய்தன. மெதுவாக அவற்றை நீக்கி நீரை மழைனீர் சேகரிப்பு அமைப்புக்கு செல்ல வழிவகுத்தேன்.

மீண்டும் 5 மணிக்கு மேல் காற்று சற்று வேகம் கூடியது. இருளும் கூட தொடங்கியது. அன்று கார்திகை தீபம் என்பதை மறந்தே போனார்கள் பலரும். இவ்வளவு ரனகளத்திலும் என் தாயார் அன்று மாலை வழிபாட்டுக்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தார். அவல் பொறி உருண்டை, வெல்ல அப்பம், வடை செய்ய மாவு அரைக்க மின்சாரம் இல்லாததால் அரிசி மாவு(dry) தட்டை.  சாதாம், சாம்பார், பீண்ஸ் பொரியல், வாழைக்காய் வருவல், ரசம் இவையெல்லம் இறைவனுக்கு படைக்கப்பட்டு சூடாக சுவையாக எங்கள் வாயில் ருசித்து வயிற்றில் இறங்கின. உன்மையான கார்திகை தீபமாக அகல் விளக்குகளால் வீடு ஒளிர்ந்தது.

 மனிதர்கள் வழக்கம் போலா இன்வர்டரை பயன்படித்தி ஒளி ஏற்படுத்திக்கொண்டார்கள்.  எச்சரிக்கை உணர்வுடன் என் வீட்டில் நான் ஒரெ ஒரு எல்.ஈ.டி விளைக்கை மட்டும் பயன் படுத்துமாறு அறிவுறுத்தினேன். நல்ல வேளையாக வாட்டர் டேங்கிலும் தண்னீர் நிறைந்தே இருந்தது.

தீப வழிபாடு முடித்து, உணவை சுவைத்து, உறக்கத்துக்கும் சென்றோம்.


end of part One