Sunday, January 22, 2017

காளைகளுக்காக கடற்கரையில் கட்டுக்கோப்பாக காளையரும் கன்னியரும்

               காளைகளுக்காக கடற்கரையில் கட்டுக்கோப்பாக காளையரும் கன்னியரும் போராடும் செய்தி பலர் வாய் கேட்டு அப்பொருள் மெய்ப்பொருள்  கண்டறிய நானும் சென்றேன் மெரீனா.

தாம்பரத்தில் இருந்து திருமயிலை இரயில் பயணச்சீட்டு வாங்கி கோட்டையில் இரயில் மாறி கலங்கரை விளக்கம் காண இறங்கினேன். இடையில் சற்றே தயங்கினேன். தாம்பரம் கடற்கரை இரயில் கோடம்பாக்கம் வரும் வரை வழக்கமான பயணமே, அங்கே பயணிக்க ஏறிய ஒரு சிறு வானரப்படை ஆரம்பித்தது சேட்டையை. சிறு சிந்தடிக் Percussion musical instruments கொண்டு ஒலி எழுப்பி விசிலடித்து கொண்டாடிக்கொண்டு வந்தது. ஓ மெரினாவிலும் இது போன்ற காட்சிகளையே காண நேரிடும் போல என சிந்தை முழுவதும் சங்கடம்.

கோட்டையில் இரயில் மாற காத்திருந்த வேளை, சென்னை வாழ் மக்களுடன் தமிழ் கூட்டங்கள் பலருடன் பிறமானில மக்களும் சாரை சாரையாய் வந்திருந்தனர் மெரினா ரயிலை எதிர்னோக்கி. பெரும்பாலானோர் கருப்பு உடைகளில். ஒரு சில சுவாரசிய காட்சிகள்:

ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் கருப்பு டி.சர்ட்டில் கங்காரு படம் ஆஸ்திரேலியா எழுத்துக்கள் கூலின் கிளாஸுடன்,  வீரத்தமிழ் காளைகள் லோஹிப் ஜீன்ஸ் கருப்பு டி.சர்ட்(மண்டை ஓடு முதல் மைகேல் ஜாக்சன் வரை), புலியை முறத்தால் விரட்டிய தமிழ் வீர மகளிர் கருப்பு சல்வார், கருப்பு ஜீன்ஸ் டி.சர்ட், லெக்கின்ஸ் டாப் என அனி திரண்டிருந்தனர். ஒரு சில குடும்பங்கள் ஏதோ திருவிழாவுக்கு செல்பவர்கள் போல மூட்டை முடிச்சு குழந்தை குட்டிகளுடன் வந்து இரயில் ஏறி இரயிலுள்ளேயே செல்ஃபி எடுத்து குதூகலித்துக்கொண்டிருந்தனர்.

MRTS தொடங்கிய காலம் முதல் காணாத கூட்டத்தை கண்டு கொண்டிருந்தது. கோட்டையில் ஏறக்குறைய முழுதும் நிறைந்த இரயில் பெட்டிகள் பூங்காநகரில் JAM PACKED. சேப்பாக்கம் ஸ்டேஷன் வந்ததும் பாதி காலி, திருவல்லிக்கேனியில் அல்மோஸ்ட் காலி, தன் வழக்கமான பயணிகள் என்னிக்கைக்கு வந்தது நான் இருந்த பெட்டி. கலங்கரை விளக்கம் இறங்கிய போது ஒரு பெரும் வானர கூட்டம் வந்து ஏறியது, உள்ளே இடம் இருந்தும் ஜன்னல்களில் நின்றும் தொங்கியும் கூச்சல் எழுப்பியவாரே தன் பயனத்தை தொடர்ந்தது.

தத்தளிக்கும் தமிழர்க்கு இளைஞர் படை கலங்கரை விளக்கமாக அமையும் போல என்ற என்னத்தில் மண் விழுந்த வருத்ததுடன் நடை போட்டேன் கடற்கறைக்கு. கலங்கரை விளக்கம் தொடங்கி காந்தி சிலை வரை சற்றே சுமாரான கூட்டங்கள், குழுக்கள். காந்தி சிலைக்கு அருகே ”அம்மன் அருள்” வண்டியில் இஸ்லாமிய சகோதரர்கள் மக்கள் அனைவருக்கும் சுடச்சுட உணவு வழங்கிக்கொண்டிருந்தனர். கோவில் திருவிழா போல காண வந்த மக்களும் போராட வந்த மக்களும் அதை வாங்கி சுவைத்தனர்.

காந்தி சிலைக்கு பின்னே உள்ள பகுதியில் ரேடியோ ஜாக்கி தினா போல தோற்றம் கொண்ட(அல்லது அவரேவா என தெரியவில்லை) மக்களை ஒருங்கினைத்து போரட்ட  நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தார். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்களை மைக் பிடித்து பேச வைத்தார். வேலூர் பகுதியை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திகொண்ட ஒரு 60 வயது அம்மையார்  விசு படத்து மனோரமா போல பீட்டாவை வெளுத்து வாங்கினார். அவர் வாழ்கையில் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுவது இதுவே முதல் முறை என்றார். இன்னொரு இல்லத்தரசி தன் கணவர் உந்துதலால் மைக் பிடித்து நம் பாரம்பரியத்தை அழிக்கும் சர்வதேச சதிகளை(மஞ்சள்,பாசுமதி etc. patent) பட்டியலிட்டர்.

இதனிடையே ”இமான்” அன்னாச்சி வந்து ஒரு புதிய கோணத்தில் போரட்ட நிகழ்வுகளை பற்றி அற்புதமாக விளக்கினார், காணும்பொங்கலைப்போல நாம் காணும் போராட்டம் இது என்பது சாராம்சம். ஒரு கேரளத்து சேட்டா பீட்டாவை எதிர்த்து ஜல்லிக்கட்டௌ வேண்டும் என பதாகை பிடித்துக்கொண்டிருந்தார். இங்கு கூடி இருந்த கூட்டத்திற்க்கு பிஸ்கட்டுகள், தண்ணீர், கடலை மிட்டாய்கள் என ஒரு சாரார் வழங்கி உற்சாகப்படுத்தியபடி இருந்தனர்.

சற்று முன்னேறி விவேகானந்தர் இல்லம் நோக்கி நடந்தால் அங்கு ஒரு சிலர் கரகம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் ஆடி ஜல்லிக்கட்டு வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தன்ர். 7-8 வயதில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒரு வட்டமாக உட்கார்ந்து கொண்டு பீட்டாவை எதிர்த்தும் ஜல்லிக்கட்டு வேண்டியும் கோஷம் எழுப்பினார்கள். இன்னொரு சிறுவர் குழு ஸ்கேட்ட்டிங் செய்து தங்கள் ஆதரவை தெரிவிதுக்கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞர் கூட்டம் அப்துல் கலாம் அவர்களில் படத்துடன், அவர் மறையவில்லை தம்முள் நிறைந்திருக்கிறார் என வலம் வந்தனர்.

அரியலூரில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நந்தினிக்கு நீதி வேண்டியும் manual scavenging எதிர்த்தும் ஒருவர்,  போராடும் தமிழ் பெண்கள் தான் உன்மையன நாயகிகள் என ஒருவர், பல் வேறு வாசகங்களுடன் பலர் தங்கள் கருத்துக்களை பதாகைகள் மூலம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இசைக்கலைஞர் திரு ஸ்ருதிராஜ் ட்ரம்ஸ் இசை எழுப்பி ஆதவு தந்துகொண்டிருந்தார். இசைக்கலைஞர் திரு. நெப்போலியன் செல்வராஜை போன்ற தோற்றம் கொண்ட ஒருவரும் அங்கே இருந்தார்.

பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு சற்று முன்னே ஒரு இளைஞர் கூட்டம், அதில் இரு அற்புத தமிழன் மிக அருமையாக உரை நிகழ்த்தினார். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நாளைய வெற்றியை சரித்திரம் சொல்லும் என்பதை மாற்றி இன்றே வெற்றி பெற்றதை போல மகிழ வைத்தார். உணவுப்பொருட்கள் வினியோகம் செய்தவர்கள் என்.ஜி.ஓ க்கள் என்றால் உண்டு வீசிய மிச்சங்கள், காலி பாட்டில்கள், குப்பைகள், பழத்தோல்கள் அனைத்தையும் போராட வந்த மக்களே பெரிய பாலிதின் பைகளில் சேகரித்து அப்புறப்படுத்தி நெகிழ்ச்சியூட்டினர்.

மெரீனா களத்தின் மையமான விவேகானந்தர் இல்லம் பகுதி மிகவும் கட்டுக்கோப்பான பகுதியாக காணப்பட்டது. ஒரு பெரிய மின் திரையில் காளையின் உருவம் சிலிர்ப்பூட்டிக்கொண்டிருந்தது. மேடை போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தி உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். காவல் துறை போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களுக்கு துனையாக இளைஞர்படையும் உதவிக்கொண்டிருந்தது. ரானுவ ஒழுங்கு என நாம் கேள்விப்பட்டதுண்டு ஆனால் குடிமக்கள் ஒழுங்கு என்பதை நாம் கேட்டதும் இல்லை கண்டதும் இல்லை. ”குடிமக்கள் ஒழுங்கு” என்பது இனிமேல் மெரீனாவை மேற்கோள் காட்டி சொல்லப்படும்.

மாலை 6 மணிக்கு மேல் இருட்ட ஆரம்பித்து விட்ட நேரத்தில் வீடு திரும்ப முடிவெடுத்து திருவல்லிக்கேணி இரயில் நிலையம் நோக்கி புறபட்டு செல்லும் வழியெல்லாம் கூட்டம், அங்கேயும் இளைஞர் படை போக்குவரத்தை சீர்செய்தும், நடந்து செல்வோர்க்கு வழி ஏற்படுத்தியும் தந்து கொண்டிருந்தனர். 15 - 35 வயதிற்குட்பட்ட இளைஞர், இளைஞிகள் தான் இந்த மொத்த போராட்டத்தையும் எடுத்துக்காட்டாக எடுத்து செல்வது.

திருவல்லிக்கேணி இரயில் நிலையம் எப்போதுமே மக்கள் நடமாட்டம் குறைவான பகுதி ஆனால் இன்றோ வரலாறு காணாத பெருங்கூட்டம், முதல் தளம் தாண்டி இரண்டாம் தளம் ஏற முடியாத அளவுக்கு. சரி பேருந்து வரும் அதிலேரி போகாலாம் என பார்த்தால் அதுவும் இல்லை. சரி வேறு வழிதான் பார்க்கவேண்டும் என நடை வண்டியை ஓட்டி அண்ணா சாலை வந்து எழும்பூர் செல்லும் பேருந்து பிடித்து, இரயில் பிடிக்க ஆன மணி இரவு 8. வீடு திரும்பியது 9.20.

ஆங்காங்கே தேவை இல்லாத அரசியல்வியாதிகளுக்கு எதிரான வாசகங்களும் கோஷங்களும், தலைமை அரசியல்வியாதிகளின் இறுதி ஊர்வல காட்சிகள் என ஆவேச போராட்டங்கள்  இருந்தாலும்,


குணமும் குற்றமும் நாடியதில் மிகயான குணம் நாடியே மிக்க மகிழ்ந்தேன்.

எழுத்துக்கு வலுசேர்க்கும் படங்களும் வீடியோக்களும் கீழே.

https://www.youtube.com/playlist?list=PLY_194v39_n2EmuExB5pIKY03T3YH7-Ms


















3 comments:

Geetha Parthiban said...

Super anna......

Unknown said...

Superb...

janibh said...

விடியல்பயணம்
மகிழ்வுப்பயணமே

Post a Comment